கடலூரில் கர்நாடக அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

கடலூரில் நாம் தமிழர் கட்சியினர், கர்நாடக மாநில அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-10 23:16 GMT
கடலூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை பெங்களூருவைச்சேர்ந்த டிரைவர் பசவராஜ்(வயது 30) ஓட்டினார். கண்டக்டராக குருசெங்கப்பா(33) இருந்தார். பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். கடலூர் ஏ.எல்.சி. சர்ச் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ்சை, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் அக்கட்சியினர் வழிமறித்து சிறைபிடித்தனர். கட்சிக்கொடிகளுடன் திரண்டு வந்திருந்த அவர்கள், கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் கண்டித்து கோஷம் போட்டனர். அப்போது அக்கட்சி தொண்டர் ஒருவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கம்பால் அடித்தார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் அந்த பஸ்சின் முன்பக்கத்தில் கறுப்பு பெயிண்டால் நாம் தமிழர் கட்சி, தமிழன்டா, காவிரி என்ற வாசகங்களை நாம் தமிழர் கட்சியினர் எழுதினார்கள். இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நாம் தமிழர் கட்சியினரிடம் இருந்து பஸ்சை மீட்டு, அவர்களை கைது செய்தனர்.

அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன், மாவட்ட தலைவர் சாமிரவி, நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் ராஜா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அதேப்போல் கர்நாடக அரசு பஸ்சையும் பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் கைதான நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சாமிரவி கூறுகையில், காவிரிக்காக அறவழியில் போராட்டம் நடத்தினால் அரசும் காவல்துறையும் ஒடுக்குகிறது. கர்நாடக காவல்துறையினர் கன்னடர் என்ற உணர்வோடு இருக்கிறார்கள், ஆனால் தமிழகத்தில் உள்ள காவல்துறையினரிடம் தமிழர் என்ற உணர்வு இல்லை, இதனால் தமிழ் உணர்வாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்றார். கர்நாடக மாநில அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தால் கடலூரில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்