காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-10 23:16 GMT
சிதம்பரம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் என்று அனைவரும் போராட்டத்தில் குதித்து வருவதால், தமிழகமே போராட்டக்களமாக மாறி இருக்கிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு வழக்கம் போல் பல்கலைக்கழகத்துக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழா உடனே விழி, முடிவெடு போராடு, மாட்டுக்காக கூடிய கூட்டம் இன்று நம் வாழ்க்கைக்காக கூட மறுப்பது ஏனோ, தமிழினமே விழித்திடு, அடிமை சங்கிலியை தகர்த்திடு என்று கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு ஆங்கிலத்துறையை சேர்ந்த மாணவர் ஷரீப் தலைமை தாங்கினார்.

இதுபற்றிய தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை மாணவ, மாணவிகள் கைவிட மறுத்துவிட்டனர். இதனால் தொடர்ந்து இவர்களது போராட்டம் நீடித்தது.

இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாமல் இருக்கும் வகையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

இதபோல் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சிவரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஏழுமலை, செயலாளர் பெருமாள், ஒன்றிய தலைவர்கள் சுப்பிரமணி, அரிஜெயம், துணை தலைவர் பாவாடைதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் வக்கீல் திருமார்பன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் அ.தி.மு.க.வை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் வெற்றிவேல், முத்துகருப்பன், ஆதிமூலம், ராஜகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்