வெயில் வளத்தை பேணுவோம்!

வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியில் தலைக் காட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கொள்ள மனம் விரும்புகிறது.

Update: 2018-04-10 09:12 GMT
வீட்டிலிருந்தால்கூட வெயிலின் வெம்மை வெறுப்பைத் தருகிறது. நிஜத்தில் வெயில் வெறுக்கக் கூடியதில்லை. அது வாரி வழங்கும் நன்மைகள் ஏராளம்.

மழையைப் போல வெயிலும் இயற்கையின் கொடையே. அதை புரிந்து கொள்ளாமல் நாம்தான் குடைக்குள்ளேயே குடிகொண்டிருக்கிறோம். உச்சி வெயில் உடம்புக்கு ஆகாதுதான். ஆனாலும் உச்சி வெயிலாலும் நல்ல பலன் உண்டு.

ஓடியாடி உழைத்த களைப்புக்கு ஓய்வெடுக்கலாம் என்று கீழே சாய்ந்தால், படுக்கையிலும் பாடாய்ப்படுத்தும் கொசுக்கள், வறுத்தெடுக்கும் இந்த வெயிலால் கொஞ்சம் மட்டுப்பட்டிருப்பதை நீங்கள் உணர முடியும். ஆம், என்ன செய்தும் தடுக்க முடியாத கொசுக்கடியை முற்றிலும் தடுத்துவிடுகிறது கொளுத்தும் வெயில். கொசுக்களின் குஞ்சுகள் திறந்த வெளி நீர் நிலையில் பெருகாமல் தடுக்கிறது வெயில். கொசுக்கள் மட்டுமல்ல கொட்டும் கழிவுகளில் வளரும் கிருமிகள், காடுகளில் இறந்த உயிர்களின் உடல்களில் வளரும் நுண்ணுயிர்கள், நீர்நிலைகளில் வளர்ச்சி கண்ட கேடுயிர்கள் போன்றவற்றையும் வெயில் கட்டுப்படுத்துகிறது.

பகல் பத்து மணிக்கு முந்திய வெயிலும், மாலை இளங்கதிரவனும் மக்களுக்கு நன்மையே செய்கிறது. மதிய வெயில் கூட நாம் வெளியில் உலவாமல் வீட்டிற்குள் ஒன்றாய் கூட ஒத்தாசை செய்கிறது. அந்த நேரத்திலாவது அனைவரும் ஒன்று கூடி முகம் மலர பேசி உறவை வளர்க்க வாய்ப்பு தருகிறது. சொக்கட்டான், பாம்புக்கட்டம், பல்லாங்குழி, கேரம் எல்லாம் வெயிலில் உறவு வளர்க்கும் விளையாட்டுகளாகும்.

காலை கதிரொளி பச்சிளங் குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுக்கிறது. சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ‘வைட்டமின்-டி’யை வாரி வழங்குகிறது. இந்த வகை வைட்டமின், உணவுப் பொருட்களின் வழியே அரிதாகத்தான் கிடைக்கிறது. அதை 10 நிமிட வெயிலே உடலுக்குப் போதுமான அளவுக்குத் தந்துவிடுகிறது.

‘வைட்டமின்-டி’தான், உடல் கால்சியத்தை கிரகிக்க துணை புரிகிறது. கால்சியம் கிடைத்தால்தான் எலும்பு பலம் பெறும். மனநிலையை சீராக்கும் செரடோனின் திரவமும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ரசாயனப் பொருளும் உடலில் வெயில் படுவதாலேயே சுரக்கின்றன. வெயிலால் உரம் பெற்ற தேகம் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும். அதனால்தான் மருத்துவர்கள் மாலை வெயிலில் நடைபயணம் செய்யச் சொல்கிறார்கள். மூளை முடக்கம் அடைந்தவர்களைக்கூட வெயிலில் பயணம் செய்ய வைப்பது ஒரு சிகிச்சை முறையே.

கொளுத்தும் கோடை வெயில்கூட நமது உடலின் வேலைப் பளுவை வெகுவாகக் குறைக்கிறது. நமது சிறுநீரகம், இடைவிடாமல் உடலில் உள்ள கழிவுகளை சிறுகச் சிறுக வடிகட்டி வெளியேற்றுகிறது ஆனால் கொளுத்தும் வெயிலோ, சிறுநீரகத்துக்கு சற்று ஓய்வு தருவதுடன் அதிகமான உடல் கழிவுகளை வியர்வையாக வெளியேற்றிவிடுகிறது. இப்படி வெளியேற்றும் கழிவில் உடல் உப்புச்சத்தை கொஞ்சம் இழந்துவிடுவதால்தான் நமக்கு தாகம் எடுக்கிறது. அதற்கும் இயற்கையே கொடையாக நுங்கு, பதநீர், இளநீர், தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றை தந்துள்ளது. இவற்றைப் பருகினால் கோடை வெயில் உடலை வறுத்தாது. வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உச்சந்தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டால் சூடு உடலில் தாவாது. தொப்பி, குடையைவிட இது சூடு தணிக்கும்.

வெயில் நம்மை வாட்டி வதைப்பதைப் போலவே பறவைகள், விலங்குகள் போன்றவற்றையும் பாதிக்கும் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். பறவைகளுக்கு வீட்டின் கூரை மீது தண்ணீர் வைக்கலாம். விலங்குகளுக்கு வீட்டின் அருகில் நீர் அருந்த வழி செய்யலாம். பாதசாரிகளுக்கு பயண வழியில் தாகம் தணிக்கும் நீர்ப்பந்தல் அமைப்பது மனிதநேயமாகும்.

வெயிலை வெறுப்பதைவிட பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். தமிழகம் போதுமான மழையும், வாழத் தேவையான வெயிலும் கொண்ட அருமையான வாழிடம். நாம் மழை நீரை சேமிக்க மறந்ததைப் போலவே வெயிலையும் பயன்படுத்திக் கொள்ளப் பழகவில்லை.

உலக நாடுகள் பலவும் வெயிலை பெருவளமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. நீர் மின்சாரம், காற்று மின்சாரம் போன்றவற்றில் மாதக்கணக்கில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒருநாள் வெயிலிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். வெயில் நேரடியாக விழாத நேரத்திலும் சூரிய கதிர்வீச்சை கிரகிக்கும் சோலார் சக்தி கருவிகளை அவர்கள் வடிவமைப்பதுடன், முழுமையான சூரிய ஆற்றலையும் மின்னாற்றலாக மாற்றிப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சியை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்திய அளவில் சூரியசக்தி ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்வதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்நிலையம் தமிழகத்தில் நிறுவப்பட்டு வருகிறது என்பதும் பெருமையே. ஆனாலும் நம் தேவையெல்லாம் தீர்க்கும் அளவுக்கு நாம் சூரிய ஆற்றலை பயன்படுத்தவில்லை என்பதும் உண்மையே. சூரிய சக்தி மின்திட்டத்தை வீட்டில் செயல் படுத்த அரசு மானியம் வழங்குகிறது. அதிக மின்கட்டணம் செலுத்துவதாக எண்ணுபவர்கள். ஓராண்டு மின்கட்டண செலவில் சூரியசக்தி திட்டத்தை செயல்படுத்திவிடலாம். பின்னர் மின்கட்டணம் என்ற பேச்சுக்கே இடமிருக் காது. மின்விற்பனையாளர் என்ற கவுரவம் உங்களுக்கு கிடைக்கலாம்.

இதற்கு அதிகம் செலவு ஆகும் என நினைப்பவர்கள் சூரியசக்தி அடுப்பு, சூரியசக்தி வாட்டர் ஹீட்டர் போன்ற சின்னச்சின்ன சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இதனால் கியாஸ் செலவு மிச்சப்படும். தமிழகத்தில் மழைபெய்யும் சிறிது காலம் தவிர பெரும்பாலான மாதங்களுக்கு சூரியசக்தி குறைவின்றி கிடைக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால் நாம் இந்த மாற்றத்தை செயல்படுத்தலாம்.

வெயில் வருத்துகிறது என்றால் அது நாம் செய்த வினையின் எதிர்விளைவுதான் என்பதையும் மறக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும். காடுகளை அழித்து கம்பெனிகளாக்கிக் கொள்கிறோம். விவசாய நிலங்களை அழித்து வீடுகளாக்கிக் கொள்கிறோம். மரத்தையும் காசாக்க நினைக்கிறோம். மரம் இருந்த இடத்தில் கூடுதலாக இரண்டு அறைகள் எடுத்துவிட்டால் வாடகை கிடைக்கும் என ஆசைப்படுகிறோம். இவற்றின் விளைவாக வெயிலை அறுவடை செய்கிறோம்.

ஆனால் நாம் வசிக்கும் வீடான பூமியின் கூரையாக இருக்கும் ஓசோனில் ஓட்டை விழ காரணமாகிவிட்டோம் என்பதை மறக்கிறோம். வெயிலின் வெம்மை தெரியாமல் இருக்க மரங்கள் நிறைந்த மலைப்பிரதேசத்திற்கு உல்லாச சுற்றுலா சென்றால் மட்டும்போதாது. நாமிருக்கும் இடத்திலும் இயற்கை குளுமையைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று மனதில் சபதம் எடுக்க வேண்டும். நீங்கள் இன்று எடுக்கும் சபதம்தான் நாளை நமது சந்ததிகளை இன்னும் கொடூரமான கோடையிலிருந்து காப்பாற்றும் என்பதை நினைவு கொள்வோம். மரம் நட்டு பராமரிப்போம். கோடையை வெல்வோம்!

- விழி

மேலும் செய்திகள்