எது மரியாதை? எது சுய மரியாதை?
‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.;
சரி, மரியாதை என்றால் என்ன? நம்முடைய நற்குணங்கள் -நற்செயல்கள் -நன்னடத்தை நமக்குச் சமுதாயத்தில் தேடித்தரும் நன்மதிப்பு தான் மரியாதை ஆகும். பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; பணமும், பதவியும் நம்மை விட்டுச்செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச்சென்று விடும்.
ஒருவர் உடல்நலம் குன்றி ஓய்வு எடுக்கும் போது, நாம் அவரைச்சந்தித்து நலம் விசாரிப்பது மனித நேயம் மிக்க செயல். மனிதப்பண்பாடும் அதுதான். ஆனால் செல்வமும், செல்வாக்கும் உடையவரை மரியாதை நிமித்தமாக சிலர் சந்திப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஒரு சாதாரண மனிதரை அப்படி யாரும் சந்திப்பதில்லையே ஏன்?நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். பணம் , பதவி படைத்தோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது. இன்று ஒரு வணக்கம் போட்டு வைத்தால், நாளை ஒன்றுக்குப் பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம் இருக்கிறது அல்லவா?
பெரியவர்களை நாம் இயல்பாகச் சந்திக்கும் போது வணக்கம் செலுத்துவதில் தவறில்லை. ஆனால் வணக்கம் செலுத்துவதற்காகவே, வலியச்சென்று சந்திப்பது சரியன்று. நாம் ஒருவருக்கு அதிக மரியாதை கொடுத்து நமது சுய மரியாதையைக் காயப்படுத்தி விடக்கூடாது. நாட்டில் பெரியவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கச் செல்பவர்களை, நாற்காலியில் அமரச்செய்து பேசமாட்டார்கள். சுய மரியாதை உணர்வுடன் ஒரு சிலர் துணிந்து அவர்களாகவே அமர்ந்து விடுவார்கள். அப்போது அந்த பெரியவர்களின் கண்களில் தீப்பொறி பறப்பதை காணலாம்.
சந்திக்க வருபவர்களை உட்காரச்செய்து உரையாடினால் அவர்களை சமமாக மதித்தது போலாகிவிடும் என்று எண்ணி நிற்க வைத்தே பேசி அனுப்பிவிடுவார்கள். அவர்களை நிற்க வைத்துப்பேசும் போது அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் என்னும் உண்மை விளங்கும் நாள் எந்நாளோ?
‘மதியாதார் வாசல் மிதியாமை கோடி பெறும்’ என்பதை மனதில் நிறுத்தி, இப்படிப்பட்ட போலிப்பெரியவர்களைச் சுயமரியாதை உடையவர்கள் சந்திக்க விரும்புவதில்லை. நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுய மரியாதை உணர்வை உருவாக்கும்; அடிமை மனத்தை அகற்றும்.
காலில் நெடுஞ்சான் கிடையாக விழுவதை ஒரு கலையாகக் கற்று ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு ஒரு நண்பர் வந்து விட்டார். உனது உயர்நிலையை எண்ணியாவது இனிமேல் காலில் விழுவதைக் கைவிடுக என்று அவருடைய நண்பர்அறிவுரை கூறினார். ‘நான் இப்படி விழுந்து,விழுந்து தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதை மட்டும் என்னால் கைவிட முடியாது’ என்று மறுமொழி சொன்னார். சுயநலம் மிக்கவர்களும் சுய மரியாதையை தொலைத்தவர்களும் அவ்வளவு எளிதில் அடிமைப்புத்தியைக் கை விட மாட்டார்கள்.
காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக்கூடும். இப்படிக்காலில் விழுந்து கிடப்பவனைப் பெரியவர்கள் சிலர் விரும்பி ,வரவேற்று மகிழலாம். ஆனால் காலப்போக்கில் காலைத்தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்.
காலில் விழுந்து கிடப்பவனை அவனது பண்பு அறிந்து பெரியவர்கள் எட்டி உதைத்து ஒதுக்கிவிடுவதும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடும். நடிப்பும் நய வஞ்சகமும் நீண்ட நாள் வெற்றி பெற முடியாது அல்லவா?
சுய மரியாதை இழந்து, குனிந்து-கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும்,சுயமரியாதை உணர்வுடன் நிமிர்ந்து நடந்தால், சமுதாயத்தில் மரியாதை நம்மை நாடி ஓடி வரும்.
தந்தை பெரியார்,பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த இந்த தமிழ் மண்ணில் நாம் பிறந்திருக்கிறோம். என்பதை எண்ணி பெருமிதம் கொள்வோம்.
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, எழிலார்ந்த ஏற்றமிகு வாழ்வு,உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.
- பேராசிரியர் அலவை பெ. மாணிக்கம்,சென்னை.