அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட தியாகி குமரன் காலனியில் உள்ள 10 வீதிகளில் இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ஆனால் 2 வீதிகள் தவிர மற்ற வீதிகளில் இதுவரை அந்த பணி நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் அந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு, குப்பை தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 3-வது வார்டுக்குட்பட்ட தியாகி குமரன் காலனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. போராட்டத்தை கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ் தொடங்கிவைத்தார். ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி 1-வது மண்டல உதவி பொறியாளர் ராம்மோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த மாத இறுதிக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், அடிப்படை வசதிகள் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டம் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.