திருப்பூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருப்பூர்,
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நிஷார் அகமது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், நிர்வாகிகள் ஆனந்த், ஜான்சன், அலாவுதீன், ஸ்டேன்லி தேவகுமார், சுகுமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். திருப்பூர் மாவட்ட சிறுபான்மையோர் பேரவை தலைவர் கிதியோன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஒருசில வாரங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுதலத்தின் மீதும், அதன் பாதிரியார் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.