திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சமரச மைய ஆண்டு விழா
திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சமரச மைய ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சமரச மையத்தின் விழிப்புணர்வு பெயர் பலகையை முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி திறந்துவைத்தார்.
திருப்பூர்,
வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச தீர்வு காணும் வகையிலும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி சமரச மையம் கோர்ட்டு வளாகங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் லெட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சமரச மையத்தின் 13-வது ஆண்டு விழா மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அல்லி தலைமை தாங்கி, சமரச மையத்தின் விழிப்புணர்வு பெயர் பலகையை திறந்துவைத்தார். சமரச மையத்தின் மூலம் தீர்வு காண பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று பேசினார்.
விழாவுக்கு வந்திருந்தவர்களை சமரச மைய கண்காணிப்பாளரும், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியான ஜெயந்தி வரவேற்றார். சமரச மையத்தின் மூலம் எந்தெந்த முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. அந்த மையத்தின் நோக்கம், செயல்பாடு குறித்த வாசகங்கள் அந்த பெயர் பலகையில் இடம் பெற்று இருந்தது. இந்த மையத்தில் மூத்த வக்கீல்கள் 27 பேர் சமரசர்களாக செயல்பட்டு வருகிறார்கள். கோர்ட்டுகளில் வழக்கு நடந்தாலும் இந்த மையத்தின் மூலம் இலவசமாக சமரச தீர்வு காண முடியும். சமரச மையம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டன.
விழாவில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜமுனா, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் கயல்விழி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாடசாமி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துணை கலெக்டர் ரவி, மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள், பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் சங்க நிர்வாகிகள், மூத்த வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை சார்பு நீதிபதி முரளதரன் நன்றி கூறினார். இந்த மையத்தில் குடும்ப சம்பந்தமான வழக்குகளான விவாகரத்து, பெற்றோர் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஜீவனாம்சம் குறித்த வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளுக்கு சுமூகமான முறையில் இருதரப்பினரும், பயிற்சி பெற்ற சமரசர்கள் முன்னிலையில் நேரடியாக பேசி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறது.