புதுமண தம்பதியின் வீட்டில் புகுந்து 20 பவுன் நகை, பணம் கொள்ளை

கொடைக்கானலுக்கு தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதியின் வீட்டில் புகுந்து 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2018-04-09 22:45 GMT
தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மும்முடி பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 35). இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆகிறது. உமாசங்கர் விவசாயிகளுக்கு அறுவடை எந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் புதுமண தம்பதி தேனிலவுக்காக கடந்த 7-ந் தேதி தங்களது வீட்டை பூட்டி விட்டு, கொடைக்கானலுக்கு சென்றனர்.

இதனிடையே நேற்று காலை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக செல்வி என்பவர் வந்தார். அப்போது பரிமளா, சுப்பிரமணி, விஜி ஆகியோரது வீடுகளின் கதவு வெளிப்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. மேலும் உமாசங்கரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வி, வெளிப்புறம் தாழ்ப்பாள் போடப்பட்ட வீடுகளின் கதவை திறந்து, அங்கிருந்தவர்களிடம் விவரத்தை கூறினார். பின்னர் இதுகுறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார், தலைவாசல் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் உமாசங்கரின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் அந்த பகுதியில் மோப்பம் பிடித்து சில அடி தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதனிடையே தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் கள் உடனடியாக விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது அதில் முகமூடி அணிந்த 2 பேரின் நடமாட்டம் பதிவாகி உள்ளது தெரியவந்தது.

எனவே உமாசங்கரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள் நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்று இருக்கலாம். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு லாரியில் ‘டூல்ஸ் பாக்ஸ்’ உடைக்கப்பட்டு இருந்தது.

அதில் இருந்த பொருட்களை வைத்து தான் கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுதொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தலைவாசல் பகுதியில் முகமூடி ஆசாமிகள் அடிக்கடி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்துடன் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் தற்போது கொள்ளை நடந்த பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் செய்திகள்