சீமை கருவேல மரங்களை அகற்ற பொது டெண்டர் விட வேண்டும்

விளாத்திகுளம் பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது டெண்டர் விட வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-04-09 22:45 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கல்வி உரிமை மீட்புக்குழு சார்பில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவசமாக படித்து வருகிறார்கள். தற்போது அவர்கள் 3-ம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டு வகுப்பு வருகிற 12-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில் அந்த பள்ளி நிர்வாகம், இந்த வருடம் கல்வி கட்டணம் முழுமையாக செலுத்தினால் தான் தேர்வு எழுத முடியும். இல்லை என்றால் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் இந்த அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் தொடர்ந்து படிக்க உதவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் சலவை தொழிலாளர் சங்க தலைவர் குட்டியப்பன் கொடுத்த மனுவில், எங்கள் சங்கங்களை சேர்ந்த 70 குடும்பத்தினர் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் துணிகளை சலவை செய்து வருகிறோம். எங்களுக்காக கடந்த 1970-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம்-ஸ்ரீபராங்குசநல்லூர் சாலைக்கு வடபுறம் 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தில் கிணறு அமைத்து, மின்மோட்டார் வைத்து சலவை செய்வதற்காக 12 அறைகளும் மீதம் உள்ள இடம் சலவை செய்த துணிகளை உலர்த்துவற்கு என சலவை நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த சலவை நிலையத்தை புதுபித்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், சாயர்புரம் மெயின் பஜாரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது அருந்த வரும் மதுபிரியர்கள், அந்த வழியாக கல்லூரி, பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடையை ஊருக்கு வெளியே வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

விளாத்திகுளம் தாலுகா அயன்செங்கல்படை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் விளாத்திகுளம் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள 237.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன. அதனை வேருடன் அகற்ற டெண்டர் விட்டால் சுமார் ரூ.60 லட்சம் வரை ஊராட்சிக்கு வருமானம் கிடைக்கும். இந்த நிலையில் தனிநபர் ஒருவருக்கு குறைந்த அளவில் டெண்டர் விட ஏற்பாடு நடப்பதாக தெரியவருகிறது. அப்படி நடந்தால் அரசுக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் பொது டெண்டர் விட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்