கூடங்குளத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது சுப.உதயகுமார் பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகாவுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொடுக்கக்கூடாது என்று அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கூறினார்.

Update: 2018-04-09 23:00 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 30 கிலோ மீட்டர் தூரத்துக்குள் உள்ள கிராமங்களில் எவ்வளவு மக்கள் வசிக்கிறார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டோம். அதாவது அணுமின் நிலையங்களில் பெரிய விபத்துகள் நடந்தால் உலைகளில் இருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பது சர்வதேச நடைமுறை. அந்த விதிமுறைகளை கூடங்குளத்தில் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கேட்டோம்.

எங்கள் மனுக்கள் ராதாபுரம் தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் எங்களுக்கு கொடுத்த பதில்கள் ஆச்சரியமாக இருந்தது. அதாவது மனுதாரர்கள் கேட்ட விவரங்கள் பராமரிக்கப்படவில்லை என்று எங்களுக்கு பதில் கூறப்பட்டது. பேரிடர் காலங்களில் எப்படி மக்களை காப்பாற்ற முடியும். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை எவ்வாறு செய்ய முடியும். எனவே, நாங்கள் கேட்ட தகவல்களை சேகரிக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவுபடுத்தக்கூடாது. கூடங்குளத்தில் அணுஉலை சேகரிப்பு மையம் இதுவரை கட்டப்படவில்லை. இந்த மையம் கட்டுவதற்கு முன்பு சுற்றுச்சூழல் குறித்த அறிக்கையை மக்களுக்கு தர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டங்களை மத்திய அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடக அரசை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு சுப.உதயகுமார் கூறினார்.

பின்னர் அவர் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுத்தார். அப்போது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அப்துல்ஜப்பார், ரமேஷ், சங்கர், பிரபா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்