என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் ஆஜர்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜ் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2018-04-09 23:00 GMT
நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள பெரிய தொட்டிபாளையம் என்ற இடத்தில் ரெயில் பாதையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி நாமக்கல் சி.பி.சி. ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேலூர் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே கோகுல்ராஜ் கொலைவழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு ரெயில்வே போலீசார் மற்றும் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா ஆகியோர் நடத்திய விசாரணை குறித்து போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ஆவண நகல்களை வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செல்வகுமார் தரப்பில் சமீபத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆவணங்களை, வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

48 பக்க ஆவணங்கள்

இந்த நிலையில் நேற்றுடன் யுவராஜின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், அவரை போலீசார் நாமக்கல் முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 48 பக்கம் கொண்ட ஆவணங்கள் வழங்கப்பட்டது. இந்த ஆவணங்களை அவர் கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவலை நாளை (இன்று) வரை ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து யுவராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் நேரில் ஆஜரானதை முன்னிட்டு நேற்று நாமக்கல் கோர்ட்டு வளாகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

மேலும் செய்திகள்