சமரச தீர்வு மையத்தை வக்கீல்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

வழக்கை விரைந்து முடிப்பதற்காக தொடங்கப்பட்ட சமரச தீர்வு மையத்தை வக்கீல்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசினார்.;

Update: 2018-04-09 22:30 GMT
கிருஷ்ணகிரி,

சமரச தீர்வு மைய 13-ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை தீர்வு மையத்தில், சமரச தீர்வு மையத்திற்கு புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா தொடங்கி வைத்தார். மேலும் சமரச தீர்வு மையத்திற்கான பதாகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பேசியதாவது:-

நமது நாட்டில் சட்டம் கடுமையாக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் மனுதாராருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடன் மேல்முறையீடு செய்வதால் வழக்கு தாமதமாகி விரைவாக நிவாரணம் கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் படி வழக்குகளை விரைந்து முடிக்கவும் இரு தரப்பினரும் சமரசம் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த சமரச மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சமரச தீர்வு மையத்தை வக்கீல்களும், வழக்கு நடத்தும் பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மனிதன், மனிதனுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை மதித்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வெற்றிக்கரமாக வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தம்பதியை சமரச மையத்தில் பேசி, வழக்கை முடித்து வைத்து அவர்கள் சேர்ந்து வாழ ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அசோகன், கிருஷ்ணகிரி மகிளா கோர்ட்டு நீதிபதி அன்புச்செல்வி, சிறப்பு மாவட்ட அமர்வு நீதிபதி அறிவொளி, சார்பு நீதிபதிகள் சசிகலா, லீலா, ராமகிருஷ்ணன், சுகந்தி, ஓசூர் மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிதா, மாஜிஸ்திரேட்டுகள் ஜெயப்பிரகாஷ், சாந்தி, மேகலா மைதிலி, சதீஷ்குமார், ராஜேஷ்ராஜூ, ராஜசேகர், கிருஷ்ணகிரி வக்கீல்கள் சங்க தலைவர் கே.ஆர்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தஸ்னீம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்