தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவேன் டி.ராஜேந்தர் பேச்சு

தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவேன் என்று தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டி.ராஜேந்தர் கூறினார்.

Update: 2018-04-09 22:45 GMT
தஞ்சாவூர்,

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பொதுக்கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் ராபர்ட் தலைமை தாங்கினார். லட்சிய தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன், மாநில பொதுச்செயலாளர் பொய்யாமணி, உழவர் இயக்கம் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவன தலைவர் ரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் லட்சிய தி.மு.க. நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தஞ்சை மண்ணில் காவிரிக்காக குரல் கொடுக்க வந்துள்ளேன். தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது. எனவே மக்களிடம் புரட்சி ஏற்பட வேண்டும். மக்களிடம் மகிழ்ச்சி இல்லை. தமிழக மக்கள் வாழ்க்கையில் இன்று அரசியல் கட்சி தலைவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் தான் உயிர் மூச்சு என்று கருதி வாழ்ந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகிறார்கள். நான் எத்தனையோ முதல்-அமைச்சர்களை பார்த்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்தால் அதை எடுத்துக்கூறுவேன். அண்ணா மறைவுக்குப்பின்னர் காவிரி தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றது யார்? மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது யார்?. உரிமையை காவு கொடுத்து விட்டு இன்று உரிமையை மீட்க நடைபயணம் செல்வதாக நாடகம் ஆடுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தால் தான் ஓட்டுபெற முடியும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் செயல்படுகிறது. ஆனால் இங்கு காங்கிரசுடன் சேர்ந்து தி.மு.க. போராடுகிறது. தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் மோடி கூட்டணி வைத்துள்ளார். மாணவர்களை போராட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் எதற்கு கூறுகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது. டெல்டாவை அழிக்க முயற்சி நடக்கிறது. நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்து விட்டனர்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு மோடி துணை போகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கொள்கைகளை தாங்கிப்பிடிக்க, தமிழகத்துக்கு துரோகம் செய்தவர்களை நான் மக்களுக்கு அடையாளம் காட்டுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிர்வாகக்குழு தலைவர் ஜீவரத்தினம், விவசாய வாழ்வுரிமை இயக்கம் பனசை அரங்கன், விளிம்பு நிலை மக்கள் இயக்க தலைவர் முத்துமாரியப்பன், மாநில பொருளாளர் ஆனந்தன், நகர நிர்வாகிகள் நாவலன், ராஜா, இளைஞர் படை சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாநில ஆலோசனைக்குழு தலைவர் முருகரெத்தினவேல் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்