ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது

அவனியாபுரம் அருகே நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில், கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பதை பார்த்து அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்

Update: 2018-04-09 22:00 GMT
அவனியாபுரம்,

அவனியாபுரத்தை அடுத்து வெள்ளைபிள்ளையார் கோவில் பஸ்நிறுத்தம் அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவனியாபுரம் போலீசார் அங்கு சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து உடலை மீட்டு விசாரித்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி (வயது 40) என்பதும், ஆட்டோ டிரைவரான இவரின் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து இறந்தவரின் மனைவி கவிதா என்ற மேரி ஏஞ்சல் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் நொண்டி மணி என்ற மணிமாறன் (26), மொட்டை என்ற செல்வகுமார் (24), சரவணன் (17) ஆகியோர் இந்த கொலை வழக்கில் சம்பந்தபட்டிருப்பதும், அவர்கள் சிந்தாமணி ரிங் ரோட்டில் மறைந்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மறைந்திருந்த 3 பேரையும் பிடித்து அவனியாபுரம் போலீஸ்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர். அதில் வெகுநாட்களாக நாங்கள் அதே பகுதியில் கஞ்சா விற்று வருகிறோம், இதை பார்த்த முத்துமாரி அடிக்கடி எங்களை மிரட்டி பணம் பறித்து வந்ததார்.

ஒரு கட்டத்தில் போலீசிடம் காட்டி கொடுத்து விடுவதாக கூறி அவர் அதிக பணம் கேட்டார். ஆத்திரமடைந்த நாங்கள் 3 பேரும் முத்துமாரியை கழுத்தை அறுத்து கொலை செய்து, அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் போட்டு சென்றுவிட்டோம். இவ்வாறு அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்