என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கொலை: சொத்தை பிரித்து கேட்டதால் கத்தியால் வெட்டி கொன்றோம், மகனுடன் கைதான விவசாயி வாக்குமூலம்

என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்தை பிரித்து கேட்டதால் கத்தியால் வெட்டி கொன்றோம் என்று மகனுடன் சேர்ந்து கைதான விவசாயி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2018-04-09 22:45 GMT
புவனகிரி,

கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டைமேடு தெருவை சேர்ந்தவர் துரை என்கிற கணேசன். இவருக்கும் இவரது தம்பியான சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த விஜயன் என்கிற ராஜா என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோத தகராறு இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கணேசனின் மகன் குருதேவ், தனது நண்பரான சீர்காழியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அபினேஷ்(29) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சித்தப்பா ராஜா வீட்டுக்கு சென்று, அங்கிருந்த ராஜா மற்றும் அவருடைய மகன் கோபிநாத் ஆகியோரிடம் தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, கோபிநாத் ஆகிய 2 பேரும் சேர்ந்து, குருதேவ், அபினேஷ் ஆகியோரை உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு குழாயால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொலை செய்யப்பட்ட குருதேவ், அபினேஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக ராஜா, கோபிநாத் ஆகிய 2 பேரும் சேர்ந்து குருதேவ், அபினேசை கத்தியால் வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ராஜா, கோபிநாத்தை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த தந்தை-மகன் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு புவனகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து ராஜா(58), கோபிநாத்(24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது ராஜா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயியான நான் புவனகிரி அடுத்த சாத்தப்பாடி தபால் நிலையம் அருகே வசித்து வருகிறேன். எனது அண்ணன் துரை என்கிற கணேசன் மேல்புவனகிரி கோட்டைமேடு தெருவில் வசித்து வருகிறார். கணேசன் மகன் குருதேவ் மற்றும் அவருடைய நண்பர் சீர்காழியை சேர்ந்த அபினேஷ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது குருதேவ், எங்களிடம் தனக்கு திருமண ஏற்பாடு செய்ய உள்ளார்கள். பெண் வீட்டில் மாப்பிள்ளைக்கு சொந்தமாக வீடு உள்ளதா என கேட்கிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், எங்களுக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்துகளை உடனே பிரித்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு நான் சொத்துகளை பிரித்து தரமாட்டேன் என்று கூறினேன். அதற்கு குருதேவும், அபினேசும் என்னிடமும், எனது மகன் கோபிநாத்திடமும் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் இருவரும் வீட்டில் இருந்த உருட்டுக்கட்டை, இரும்பு குழாயால் அவர்கள் 2 பேரையும் தாக்கினோம். இதில் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது நாங்கள் இருவரும் அவர்கள் 2 பேரையும் கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டோம். நாங்கள் கொலை செய்ததை அறிந்த போலீசார் எங்கள் 2 பேரையும் தேடி வந்தனர். இதையடுத்து நானும் எனது மகன் கோபிநாத்தும், புவனகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தோம்.

இவ்வாறு ராஜா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்