மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி, 65 பேர் கைது

மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-04-09 23:00 GMT
புதுச்சேரி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும், தனித் தமிழ்நாடு வேண்டும் என்று வலியுறுத்தியும் பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் நேற்றுக்காலை காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து அவர்கள் முற்றுகையில் ஈடுபடுவதற்காக கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்திற்கு இயக்க அமைப்பாளர் தீனா தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் இயக்க செயலாளர் சந்திரன், துணை அமைப்பாளர் கர்ணா, தலைவர் தூயவன், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன்வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் அதையும்மீறி கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென தலைமை தபால் நிலையத்தின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகள் மீது கருப்பு மை பூசினர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்