கார்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

வத்தலக்குண்டு அருகே காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்தனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியபோது இந்த பரிதாபம் நிகழ்ந்தது.;

Update: 2018-04-09 22:15 GMT
வத்தலக்குண்டு,

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் அப்துல்ரசித் (வயது 48). இவர், தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி ரெஜினாபேகம் (35). இவர்களுடைய மகள் நமியா (14), மகன்கள் பாஸ்டின் (10), ஆசின் (9), பாசில் (8).

இந்தநிலையில் அப்துல்ரசித் தனது குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர், குடும்பத்துடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பின்னர் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு நேற்று காலை அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது கார் பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் கட்டகாமன்பட்டி அருகே ஒரு வளைவான பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அந்த சமயம் எதிரே திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. எதிர்பாராத விதமாக அப்துல்ரசித் குடும்பத்தினர் வந்த காரும், அரசு பஸ்சும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

பஸ் மோதிய வேகத்தில் கார் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டது. விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய அப்துல்ரசித், ரெஜினாபேகம், பாஸ்டின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். நமியா, ஆசின், பாசில் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து காயம் அடைந்த நமியா உள்பட 3 பேரையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நமியா பரிதாபமாக இறந்தாள். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஆசினும், பாசிலும் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. விபத்து காரணமாக வத்தலக்குண்டு-தேனி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்