பிளஸ்-2 தேர்வில் தோல்வி பயத்தால் மாணவி தீக்குளித்து தற்கொலை

பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-04-09 22:15 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. கூலி தொழிலாளி. இவருடைய மகள் நந்தினி(வயது 17). இவர், சித்தாமூரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. மாணவி நந்தினி, தினமும் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு வந்ததும், தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு தான் சரியான பதில் எழுதி உள்ளோமா? என புத்தகத்தை எடுத்து விடைகளை சரிபார்த்து வந்தார்.

அப்போது சில கேள்விகளுக்கு அவர் சரியான முறையில் பதில் எழுதாமல் இருந்ததால், தான் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாட்டோமோ? என்ற பயம் அவருக்கு ஏற்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தால் அவர் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் தவித்து வந்தார்.

இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி நந்தினி, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவி நந்தினி, அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி சித்தாமூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி நந்தினி, தேர்வில் தோல்வி பயத்தில்தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்