போலி விசா மூலம் துபாய் செல்ல முயன்ற 11 பேர் கைது

போலி விசா மூலம் துபாய் செல்ல முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-08 22:14 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் துபாய் செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய சையத் சமீனா அலி (வயது24) என்பவருடன் 10 பேர் வந்திருந்தனர். அப்போது குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சையத் சமீனா அலி வைத்திருந்த விசா போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் சையத் சமீனா அலியுடன் வந்த மற்ற 10 பேரின் விசாக்களையும் சோதனை போட்டனர். இதில் அவர்கள் அனைவரும் போலி விசா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவர்களை பிடித்து சாகர் போலீசில் ஒப்படைத்தனர். சையத் சமீனா அலி உள்பட 11 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதில், கைதான மற்றவர்களின் பெயர் பிலிப் முகமது மஜித் (29), சபீர் ஜமீல் (29), சேக் பேகம் முன்னா (48), சபீஸ் அகமது (21), பிரவின் சேக் (48), அன்சாரி அகமது (19), சோட்டா ஹனீப் (19), முகமது காலித் (40), அக்பர் (40), சேக் முகமது என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 55 வங்கி கடன் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்