காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாவூர்சத்திரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-08 22:30 GMT
நெல்லை, 

புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை நீக்க வேண்டும். கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து உள்ள மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அப்துல் ஜப்பார், புரட்சிகர இளைஞர் கழக நிர்வாகிகள் மாரிமுத்து, பேச்சிமுத்து, பேச்சிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் புலிகள் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பில் பாவூர்சத்திரத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

ஆலங்குளம் தொகுதி செயலாளர் தமிழ்குமார், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் இளஞ்சூரியன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் அந்த அமைப்பினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் இருந்து நெல்லை நோக்கி வந்த பயணிகள் ரெயில் காலை 11.20 மணிக்கு பாவூர்சத்திரத்துக்கு வந்தது. அந்த ரெயில் முன்பு அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 24 பேரை பாவூர்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சிவகிரி பஸ் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகிரி நகர தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தார். வாசுதேவநல்லூர் தொகுதி செயலாளர் சீனிவாசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இசை மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மருத்துவர் பாசறை செயலாளர் கற்பகராசு நன்றி கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கடையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடையம் சின்னதேர் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தினகரன் தலைமை தாங்கினார். கடையம் ஒன்றிய செயலாளர் பாலமுத்து, இளைஞர் பாசறை துணை செயலாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், மாநில மகளிர் பாசறை செயலாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொகுதி செயலாளர் நாகலிங்கம், தலைவர் முத்துராசு, துணை செயலாளர் செந்தில், இளைஞர் பாசறை செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்