திருவண்ணாமலையில் 20 கிலோ மான்கறியுடன் வாலிபர் கைது

திருவண்ணாமலையில் 20 கிலோ மான்கறியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-04-08 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை வன சரகர் மனோகரன் தலைமையில் வனவர் சங்கர், வனகாப்பாளர் அரவிந்த், வனக் காவலர்கள் கணேஷ், வேடியப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் சொரகுளத்தூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மல்லாடி அரசு இல்லம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை வனத்துறையினர் மடிக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார். அதைத் தொடர்ந்து வனத்துறையினர் மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பார்த்தனர். அதில் சுமார் 20 கிலோ எடையுள்ள மான்கறி ½ கிலோ மற்றும் 1 கிலோ என தனித்தனியாக பார்சல் கட்டப்பட்டு இருந்தது.

கைது

இதையடுத்து வனத்துறையினர் மான்கறியையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவண்ணாமலை அருகில் உள்ள கொண்டம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பதும், தப்பி ஓடியவர் அன்பு (29) என்பதும், இவர், கார்த்திக்கின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடிய அன்புவை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்