கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 160 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-08 23:00 GMT
ஓசூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி கட்சியினர், ஓசூர் அருகே உள்ள மூக்கண்டபள்ளியில் இருந்து ஊர்வலமாக அத்திப்பள்ளி எல்லை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே வந்தபோது, போலீசார் அவர்களை மேற்கொண்டு முன்னேறி செல்லாதவாறு தடுத்தனர். அப்போது சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர், சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியை தாண்டி குதித்து கர்நாடக எல்லை நோக்கி செல்ல முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை விரட்டி சென்று, குண்டுகட்டாக தூக்கி வந்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதனை கண்டித்து சிலர், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்த சம்பவத்தால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதிபரபரப்பாக காணப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் முற்றுகை போராட்டத்தையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக் ராஜா தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜா சோமசுந்தரம்(ஓசூர் டவுன்), சரவணன்(ஓசூர் சிப்காட்), செந்தில்குமார்(பாகலூர்) மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மேலும் செய்திகள்