உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ள தீர்மானம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் வருகிற 13-ந்தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்வது என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
பல்லடம்,
உழவர் உழைப்பாளர் கட்சியின் செயற்குழுக்கூட்டம் பல்லடம் கோடங்கிபாளையம் பிரிவு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈசுவரன் மற்றும் மாவட்ட, வட்டார தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக விவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான காவிரி நதி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைக்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்துவது, கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கக்கூடாது, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆய்வு மையம் ஆகியவற்றை எதிர்த்தும்விவசாய பயன்பாட்டிற்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 13-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதி அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.