காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பண்ணாரி சோதனை சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்தியமங்கலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் தமிழக மேற்கு மண்டல பொறுப்பாளர் விஜய் வின்சென்ட் தலைமையில் கட்சியினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடி அருகே உள்ள ரோட்டில் ஒன்று கூடினார்கள். பின்னர் அனைவரும் வீர சபதம் ஏற்றார்கள்.
அதன்பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கட்சி கொடி படம் மற்றும் சந்தன கடத்தல் வீரப்பன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் படங்களை கையில் ஏந்திக்கொண்டு ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் “உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு” “மோடி அரசே விவசாயிகளை வஞ்சிக்காதே” “தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்காதே” என மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், கோவை இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பவானிசாகர் தொகுதி செயலாளர் பொதிகை சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியன், சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டதாக 5 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இதேபோல் கொடுமுடியில் நேற்று பகல் 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகு என்கிற பிரகாஷ் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கொடுமுடி ரெயில்வே கேட் அருகே கட்சியினர் ஒன்று கூடினார்கள். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்றதாக 21 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.