பாலம்பாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

பாலம்பாடி கிராமத்தில் குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-08 22:45 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் அருகே உள்ளது பாலம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்கள் குடிநீர்க்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், குழாய் மூலம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இக்கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் கிராமமக்கள் வெகுதொலைவில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். இதனையடுத்து குடிநீர் குழாயை சரி செய்து, சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பாலம்பாடி கிராம மக்கள் நேற்று அரியலூர்-ஆலத்தூர் கேட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி சாலை மறியலை கைவிட்டு செல்லாமல் அங்கே இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சுக்கு கிராமமக்கள் வழி விட்டு, மீண்டும் சாலை மறியலை தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு வந்த ஊராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குழாய் சரி செய்து, குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்