சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது

சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-08 21:30 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச் சேர்ந்தவர் தேவி (வயது 46). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6-ந் தேதி தியாகராயநகர் திருமலைபிள்ளை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை, மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர். பின்னர், மோட்டார் சைக்கிளில் இருந்து ஒருவர் இறங்கி தேவியை பின்தொடர்ந்து நடந்து சென்றார்.

திடீரென்று தேவியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். தேவி சங்கிலியை பிடித்துக்கொண்டு போராடினார். அப்போது அந்த மர்மநபர் தேவியை சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றார். இதில், சங்கிலி 2 துண்டானது. பின்னர் கையில் கிடைத்த சங்கிலியுடன் மர்மநபர் தயாராக இருந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.

இதில் காயம் அடைந்த தேவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தேவியை மர்மநபர் பின்தொடர்ந்து வரும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதைவைத்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ், மதன்குமார் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் சங்கிலி பறிப்பை ஒரு தொழிலாக செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்