காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-08 22:45 GMT
திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் கணேசன், மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாநில துணைச்செயலாளர்கள் சண்முக நாதன், இயேசுராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக காவிரி நீர் பிரச் சினையில் கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்பட்டு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இந்த நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், புதுக்கோட்டையில் ஹட்ரோ கார்பன் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் தமிழகத்தில் விவசாய நிலங்களே இருக்காது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்