ஊட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் அங்கன்வாடி ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.;

Update: 2018-04-08 22:00 GMT
ஊட்டி,

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நீலகிரி மாவட்டம் சார்பில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் நேற்று பேரணி நடைபெற்றது.

பேரணி ஊட்டி கேஷினோ சந்திப்பில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் உள்ள எச்.ஏ.டி.பி. அரங்கம் வரை நடைபெற்றது. பேரணியில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து எச்.ஏ.டி.பி. அரங்கில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை பேரணியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில பொருளாளர் பாக்கியம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டெய்சி கலந்துகொண்டு பேசும்போது, 7-வது ஊதிய கமிஷனை அமல்படுத்தி அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்கள் 2 திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருவதை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

நீலகிரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.13 ஆயிரத்து 500-ஐ குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட மானிய தொகையை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். 1.1.2016-முதல் 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே மாதம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தொகையை முதல் வாரத்தில் வழங்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப குழந்தைகளுக்கு காய்கறி, உணவுபொருட்கள் வாங்க தேவையான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

13 துறைகளின் பணிகளை பகிர்ந்து செய்யும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு கிலோ ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்