மணிமங்கலத்தில் மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 பேர் பலி

மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-04-08 21:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் பாரதி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் சதீஷ் (வயது 25). டிரைவர். அவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான வீரபத்திரன் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மணிமங்கலம் பஜார் பகுதியில் இருந்து பாரதிநகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மணிமங்கலம் பகுதி சாலையோர வளைவில் ஸ்ரீபெரும் புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராவிதமாக மோதியது. அப்போது அந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதியது.


இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடன் இருந்த வீரபத்திரன் மற்றும் நடந்து சென்ற பாலகிருஷ்ணன் (45) இருவரும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மணிமங்கலம் பகுதியில் தங்கி லாரி டிரைவராக வேலை செய்து வந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்