பேரம்பாக்கத்தில் பூட்டி கிடக்கும் காவல் உதவி மையத்தை திறக்க வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்

பேரம்பாக்கத்தில் பூட்டி கிடக்கும் காவல் உதவி மையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Update: 2018-04-08 21:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தபால் நிலையம், வேளாண்மை விற்பனை நிலையம், தீயணைப்பு நிலையம், கூட்டுறவு பால் விற்பனை நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை விற்பனைக்கிடங்கு போன்ற 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. மேலும் பேரம்பாக்கத்தில் இருந்து தினந்தோறும் அரக்கோணம், காஞ்சீபுரம், சுங்குவார்சத்திரம், திருவள்ளூர், கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம், பொன்னேரி, பூந்தமல்லி, சென்னை போன்ற பகுதிகளுக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் மக்களின் நலனுக்காக பேரம்பாக்கம் பஸ் நிலையம் அருகே காவல் உதவி மையம் திறக்கப்பட்டது.

அதில் போலீசார் தங்கி காலை, மாலை வேளையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த காவல் உதவி மையம் பூட்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்களை போலீசார் கண் காணிக்க முடியாத நிலை உள்ளது.

எனவே பேரம்பாக்கத்தில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த காவல் உதவி மையத்தை காலதாமதம் செய்யாமல் திறக்க வேண்டும். அதில் நிரந்தரமாக போலீசார் தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்