சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே உள்பட பல பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 12 பேர் கைது

பல பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு ரூ.28 லட்சம் மதிப்புள்ள பாக்கு மூட்டைகள், லாரிகள் மீட்கப்பட்டன.;

Update: 2018-04-08 21:15 GMT
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே உள்பட பல பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பிலான பாக்கு மூட்டைகள், லாரிகள் மீட்கப்பட்டன.

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லிங்கதஹள்ளி பகுதியில் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாக்கு மூட்டைகள் தொடர்ந்து திருட்டு போகும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தரிகெரே போலீசார் லிங்கதஹள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் ஏராளமான பாக்கு மூட்டைகள் இருந்தன. ஆனால் அந்த பாக்கு மூட்டையை எடுத்து செல்ல ஆவணங்கள் இல்லை. இதனால் லாரியில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பெயர் மோசின்(வயது 25), ஜபி(28) என்பதும், அவர்கள் லாரியில் கொண்டு வந்தது திருடப்பட்ட பாக்கு மூட்டைகள் என்பதும் தெரிந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் சேர்ந்து தங்களின் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே உள்பட பல பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நசீர் உல்லா, ஜாபர், முபாரக், சையர், எபிக், ரமேஷ், நிகில், அமின், சலீம் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 150 பாக்கு மூட்டைகள், 2 லாரிகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் மீட்கப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.28 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலை சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்