2,500 பேருக்கு ரூ.14½ கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

சமூக நலத்துறை சார்பில் 2500 பேருக்கு ரூ.14½ கோடி மதிப்பில் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

Update: 2018-04-08 22:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ராஜேந்திரன், காமராஜ், ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டம், பட்டயம் படித்த 1,350 பெண்கள், 10, 12-ம் வகுப்பு படித்த 1,150 பெண்கள் என்று மொத்தம் 2,500 பேருக்கு ரூ.14 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கமாகும். அதனால் தான் ஏழை பெண்கள் கல்வி கற்பதற்காக விலையில்லா சீருடை, சைக்கிள், மடிக்கணினி மற்றும் உதவி தொகைகளை வழங்கினார். இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் தான் ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

அரசின் நிதிநிலை சற்று பற்றாக்குறையாக இருந்தாலும் ஏழை, எளியவர்கள், குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் ஜெயலலிதா அக்கறையுடன் செயல்பட்டார். அதே அக் கறையோடு இன்றைய அரசும் செயல்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்