ஆட்டோவில் அழைத்துச் சென்று பெண்ணிடம் நூதன முறையில் 6½ பவுன் சங்கிலி பறிப்பு

ஆட்டோவில் அழைத்துச் சென்று, பெண்ணிடம் நூதனமுறையில் 6½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-07 22:36 GMT

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள பள்ளித்தெருவை சேர்ந்தவர் பொன்மணி (வயது 62). இவர் நேற்று காலை பழங்கள் வாங்க சத்துவாச்சாரி சர்வீஸ் சாலைக்கு சென்றார். அப்போது அவரிடம், அங்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர், எங்கே போக வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் பழக்கடைக்கு என்று கூறியுள்ளார். உடனே அவர், அருகில் உள்ள பழக்கடையில் இறக்கிவிடுவதாக கூறி ஆட்டோவில் ஏறும்படி கூறியுள்ளார். அப்போது ஆட்டோவினுள் 3 பெண்கள் இருந்துள்ளனர். அவர்களும் தன்னை போல் சவாரி என நினைத்த பொன்மணி ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற போது ஆட்டோவில் இருந்த ஒரு பெண் வாந்தி எடுப்பது போன்றும், மயக்கம் வருவது போன்றும் நாடகமாடியுள்ளார்.

அப்போது அவர்கள் பொன்மணியின் கவனத்தை திசை திருப்பி, அவரின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். பின்னர் அவரை சாலையோரம் இறக்கிவிட்டு விட்டு, ஆட்டோ அங்கிருந்து சென்றது.

பின்னர், பொன்மணி தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது மருமகள், பொன்மணியின் கழுத்தில் தங்கச்சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பொன்மணியிடம் கேட்கவே, அப்போது தான் அவருக்கு தன் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் நாடகமாடி கவனத்தை திசை திருப்பி பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்