வேளாண்மை துறை சார்ந்த செயல்பாடுகளை அறிய உழவன் செல்போன் செயலி அறிமுகம்

உழவன் செல்போன் செயலி மூலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-04-07 23:00 GMT
கடலூர்,

வேளாண்மை துறை சார்ந்த செயல்பாடுகளை அறிய உழவன் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் தண்டபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு வேளாண்மையில் தமிழ்நாடு அகில இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையினால் 2010-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்குவதற்காக www.tnagrisnet.tn.gov.in என்ற இணைய தளம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தேசிய அளவில் முதல் முறையாக 70 லட்சம் விவசாயிகள் அடிப்படை தகவல்கள், பண்ணை மற்றும் மண்வளம் சார்ந்த தகவல்கள் வலைதளத்தில் உள்ளடு செய்யப்பட்டு, அதற்கான ஆலோசனைகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இந்த துறையினால் வழங்கப்பட்டு வருகிறது.

வேளாண்மை துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக வேளாண்மை துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக உழவன் என்ற செல்போன் செயலி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் செயல்படும் விதமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு 9 முக்கிய அடிப்படை சேவைகள் வழங்கப்படுகிறது. அதாவது, அரசின் வேளாண் மானியத்திட்டங்கள் பற்றிய தகவல்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், விதை இருப்பு விவரம், வேளாண் எந்திரங்கள் வாடகை மையங்கள் விவரம், விளை பொருட் களின் சந்தை விலை, வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்க பணியாளர்களின் வருகை விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஆகவே கடலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த உழவன் செல்போன் செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, விவசாயம், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.இது பற்றிய மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அல்லது வேளாண்மை அலுவலர்கள் அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்