முதியவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர் கைது

வையம்பட்டி அருகே திருட்டுப்பட்டம் சுமத்தியதால் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-07 23:00 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்தன் (வயது 65). திருமணமாகாத இவர் அந்த பகுதி மக்கள் அவ்வப்போது சொல்லும் வேலையை செய்து விட்டு, அதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அங்கு அவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி, சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் முத்தனுடன் இரவில் உறங்குவது தெரிய வந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சுரேசை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் முத்தனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது முதியோர் உதவித்தொகையை சுரேஷ் திருடியதாக அவர் மீது முத்தன் திருட்டுப்பட்டம் சுமத்தினார். இதனால் அவர் மீது சுரேஷ் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக தூங்கினர். அப்போது, போதையில் இருந்த சுரேசுக்கு முத்தன் திருட்டுப்பட்டம் சுமத்தியது நினைவுக்கு வரவே, நன்றாக தூங்கி கொண்டிருந்த முத்தனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் மீது வையம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் வையம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்