கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் ஓய்வுக்கூடம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தங்கும் ஓய்வுக்கூடத்தையும், பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2018-04-07 23:15 GMT
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி, சட்டசபை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், “கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பவரால் பணி இடத்திற்கு அருகில் தற்காலிக இருப்பிட வசதி செய்து கொடுக்கப்படவேண்டும்; ஆனால், அவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் தங்கும் இடவசதிகள் பாதுகாப்பு அற்றதாக உள்ளன. மேலும் சிறிய கட்டுமான நிறுவனங்கள் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதே இல்லை. இந்த சிரமங்களைப் போக்கிடும் வகையில், 9 இடங்களில் 7 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டப்படும்” என்று கூறி இருந்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், காஞ்சீபுரம் மாவட்டம் தையூர் பி கிராமத்தில் ஆயிரம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கும் வகையில் ஓய்வுக்கூடம் கட்டப்பட்டு உள்ளது. அதை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த ஓய்வுக்கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சலவை செய்யும் வசதி, குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு மையம், வங்கி தொடர்பு சேவை, படிப்பகம், சுகாதார மையம், பொழுதுபோக்கு மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகம் கட்டப்பட்டு உள்ளது.

அதையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன்மூலம், அந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள், வேலையளிப்போர் மற்றும் வணிகர்கள் பயன் அடைவார்கள்.

இந்த தகவல்கள், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம் பெற்று உள்ளன.

மேலும் செய்திகள்