மத்திய, மாநில அரசு உதவிகளை பெற அனைவரும் கட்டாயம் வங்கியில் கணக்குவைத்திருக்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசு உதவிகளை பெற அனைவரும் கட்டாயம் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமென கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-04-07 22:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் தனியார் திருமண நிலையம் ஒன்றில் ராஜ்மாதா மோடி பொது சேவை மையம் தொடக்க விழா மற்றும் தோழிகள் அமைப்பு தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியும், மகாராஷ்டிரா பெண்கள் அமைப்பின் சேர்மனுமான விஜயா ரகோத்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விக்டோரியா கவுரி முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு நெல்லிதோப்பு, உருளையன்பேட்டை, லாஸ்பேட்டை, மணவெளி, அரியாங்குப்பம் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மோடி பொது சேவை மையங்களை காணொலி காட்சிகள் மூலமாக தொடங்கி வைத்தார்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

இந்த விழாவில் கலந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமூகத்தை மாற்றும் சக்தியாக பெண்கள் விளங்குகிறார்கள். பெண்கள் அன்றாட நிகழ்வுகளை செய்திகள் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும். பொதுசேவை மையம் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை தெரிந்துகொள்ளலாம். சுயஉதவிக் குழுக்களில் பெண்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். இதனை பெண்கள் பயன்படுத்தி கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

அனைவரும் கட்டாயம் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டது. குடிநீரை யாரும் வீணாக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கான ஏற்பாடுகளை தோழிகள் அமைப்பின் புதுவை மாநில தலைவி ஜெயலட்சுமி, துணைத்தலைவி ஜெயந்தி, செயலாளர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர். இதில் பா.ஜனதா புதுவை மாநில தலைவர் சாமிநாதன் உள்பட நிர்வாகிகள், மகளிரணியினர், தோழிகள் அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்