காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில், மாணவ, மாணவிகள் தர்ணா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில், மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள், “காளைய பாய வைச்சதும் நாம் தான், காவிரியை பாய வைக்க வேண்டியது நாம் தான்” என கோஷங்கள் எழுப்பினர்.

Update: 2018-04-07 23:00 GMT
தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்தினர்.

இது தவிர மாணவர்கள் அமைப்பினர், விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தஞ்சையில் மாணவர்கள் தலைமை தபால் நிலையத்தை பூட்டியும், புது ஆற்றுக்குள் இறங்கியும் போராட்டம் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று தஞ்சை ரெயில் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சிவகங்கை பூங்கா வரை ஊர்வலமாக செல்லப்போவதாக தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் ரெயில் நிலையம் அருகே சாலையின் ஓரத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் 11.30 மணி வரை நீடித்தது. கொளுத்தும் வெயிலில் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்தபடி கோஷங்கள் எழுப்பினர். அப்போது மாணவர்கள், “காளைய பாய வைச்சதும் நாம் தான், காவிரியை பாய வைக்க வேண்டியதும் நாம் தான்”, என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் போலீசார் அவர்களை ஊர்வலமாக செல்ல அனுமதித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக அண்ணா சிலை வரை சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்