வெடி வெடித்ததில் தீ விபத்து: சிலிண்டர் வெடித்ததில் மூளை சிதறி என்ஜினீயரிங் மாணவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின்போது சிலிண்டர் வெடித்ததில் மூளை சிதறி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-04-07 23:00 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆரியலூரை சேர்ந்தவர் மாரியாயி(வயது 70). இவர் நேற்று காலை உயிரிழந்தார். இவருடைய இறுதி ஊர்வலத்தின்போது வெடி வெடித்ததாக தெரிகிறது. அப்போது அந்த பகுதியில் உள்ள ரம்யா என்பவருக்கு சொந்தமான வீட்டு கூரையில் தீப்பிடித்தது.

வீட்டு கூரையில் தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) நடராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இருப்பினும் ரம்யாவின் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து தீயை அணைத்தவர்களின் மீது விழுந்தது.

இதில் ஆரியலூரை சேர்ந்த திருசெல்வன் மகன் திலீப்(20), மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் மரைன் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இந்த தீவிபத்தில் திருசெல்வன், முருகபாண்டி, பூமிநாதன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்- இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர் பலியான திலீப்பின் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து வெடி வெடித்ததால் ஏற்பட்டதா? மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்