காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தபால் நிலையத்தை முற்றுகை 36 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 36 பேரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-07 23:00 GMT
திருவாரூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி நீரை நம்பியே விவசாய சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் தட்டுபாட்டால் 3 போக சாகுபடி என்ற நிலை மாறி ஒரு போக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை பெற்றிட காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே தீர்வு ஏற்படும். ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் கடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் பஸ் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர்.

முன்னதாக அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உதய குமார் (திருவாரூர்), ராஜா (தாலுகா) மற்றும் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தபால் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் படுத்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், ஆசாத், நிர்வாகிகள் மாரிமுத்து, தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.

இதே போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சியினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் பழைய ரெயில் நிலையத்தில் இருந்து மக்கள் ஜனநாயக குடியரசு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சிவராமன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்