ராஜபாளையம் அருகே, லாரி-கார் மோதல்: பெங்களூருவை சேர்ந்த 7 பேர் பலி

ராஜபாளையம் அருகே, கார் மீது லாரி மோதியதில் பெங்களூருவை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-04-07 22:00 GMT
ராஜபாளையம்,

பெங்களூரு வித்தகண்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கனகவுடா (வயது40) இவர் பெங்களூருவில் அரசு பஸ் மெக்கானிக்காக இருந்தார். இவருடன் பணியாற்றிய டிரைவர் மகேஷ் (32), கிளார்க்காக இருந்த தாரா (32), மற்றொரு டிரைவரான லட்சுமி நாராயணன் (45) ஆகியோர் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.

இதன்படி ஒரு காரில் கடந்த 2-ந் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர். ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கேரளா போனார்கள். அங்கு பல இடங்களை பார்த்துவிட்டு மதுரை வந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்திருந்தார்கள்.

இதற்காக மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். சங்கனகவுடா காரை ஓட்டி வந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோவிலூர் அரசு விதைப்பண்ணை அருகே நள்ளிரவில் வந்து கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு சீனி மூடைகளை ஏற்றி வந்த லாரியும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த சங்கனகவுடா, தாரா, மகேஷ், அவருடைய மனைவி முனிரத்னா(28), மகள் தீட்சிதா(10), லட்சுமி நாராயணனின் மனைவி கலாவதி(38) ஆகியோர் சம்பவ இடத்திலும், சங்கனகவுடாவின் மகன் பிரவீன்(11) ராஜபாளையம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

சங்கனகவுடாவின் மனைவி சாந்தா(34), லட்சுமிநாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரை ஓட்டி வந்த சங்கனகவுடா உயிரிழந்த நிலையில் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டதால் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி உடலை மீட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ராஜாராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தென்காசியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமகிருஷ்ணன் (32) என்பவரிடம் சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்