கோவில்பட்டியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆய்வு

கோவில்பட்டியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தனர்.

Update: 2018-04-07 22:00 GMT
கோவில்பட்டி,

பள்ளி கல்வித்துறை சார்பில், பிளஸ்-2 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில், கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்த்துக்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளனர். தமிழகத்தில் 9 கல்லூரிகளில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 21 நாட்கள் நடைபெறும்.

தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு 6 கல்லூரிகளிலும், ஆங்கிலவழி கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு 3 கல்லூரிகளிலும் நீட்தேர்வு பயிற்சி வகுப்பு நடைபெறும். கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரியில், ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு நீட்தேர்வு பயிற்சி அளிக்கப்படும். இங்கு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இங்கு மாணவர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்கும் இடம் வசதி வழங்கப்படும். இங்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக மாணவர்களை சேர்த்து, நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு படிப்படியாக பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 54 வயதை கடந்தவர்களுக்கும் பணிநியமனம் வழங்கப்பட்டு உள்ளது. அலமாரி இல்லாத நூலகங்கள் குறித்து தகவல் தெரிவித்தால், அந்த நூலகங்களுக்கு உடனே அலமாரி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும் செய்திகள்