வர்த்தக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம்

குமரி வர்த்தக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-04-07 23:00 GMT
குளச்சல்,

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் மணக்குடிக்கும் இடையேயான பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்காக பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக கொடுத்த அனுமதியை போலீசார் திடீரென ரத்து செய்தனர். இதனால் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வள்ளங்கள், கட்டுமரங்கள் மூலம் துறைமுகம் அமைய இருக்கும் கடல் பகுதியில் படகுகளில் இருந்தவாறே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீனவர்கள் வேலைநிறுத்தம்

இதேபோல் குமரி துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளச்சல் மீன்பிடி துறைமுக மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வள்ளம், கட்டுமர மீனவர்கள் துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், அவர்கள் தங்களது கட்டுமரம், வள்ளங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று நிறுத்தியிருந்தனர்.

குளச்சல் மீன் ஏலக்கூடத்திலும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்களை ஏற்றிச்செல்ல வந்த வாகனங்களை அங்கேயே நிறுத்தி வைத்தனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் குளச்சல் மீன்பிடி துறைமுகம் மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்