கத்தரிக்காய் திருடிய வழக்கில் 9 ஆண்டு போராட்டம்!

இத்தாலியில் பசியில் வாடிய குழந்தைகளுக்காக கத்தரிக்காய் திருடியவர், 9 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

Update: 2018-04-07 07:36 GMT
டந்த 2009-ம் ஆண்டு, இத்தாலியின் லீசி பகுதியில் அமைந்துள்ள தனியார் காய்கறித் தோட்டத்தில் இருந்து ஒருவர் சில கத்தரிக்காய்களைப் பறித்துள்ளார்.

அது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், தனது பிள்ளைகளின் பசி கண்டு பொறுக்க முடியாமலே தாம் திருடியதாகக் கூறினார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 5 மாத சிறைத் தண்டனையும், ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கியது.

பின்னர் மேல்முறையீட்டில், 4 மாத சிறைத் தண்டனையுடன் ரூ. 9 ஆயிரத்து 600 அபராதம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, குறிப்பிட்ட நபரின் வழக்கறிஞர்கள் இத்தாலியின் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வறுமை நிலையைக் கருத்தில் கொள்ளாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியது.

அதோடு, சம்பந்தப்பட்ட நபர் காய்களைத் திருடி பெரும் லாபத்துக்கு விற்பனை செய்யவில்லை. தமது இயலாமையால், பிள்ளைகள் பசியால் துடிப்பதைப் பொறுக்க முடியாமல்தான் திருடியுள்ளார்.

இது எந்த வகையில் குற்றமாகும் எனவும் உச்சநீதிமன்றம் எதிர்த் தரப்பினரிடம் கேள்வி எழுப்பியது.

அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து, 9 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கில் இருந்து அந்நபரை விடுவித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகள் நீண்ட இந்த வழக்கால் அரசுக்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து சுமார் ஆறரை லட்ச ரூபாய் செலவானதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

இதற்கு, ‘கத்தரிக்காய்தானே... சாப்பிட்டுவிட்டுப் போகட்டும்’ என்று சந்தோஷமாக விட்டிருக்கலாமே! 

மேலும் செய்திகள்