விண்ணை வென்ற விமானி அவனி!
போர் விமானத்தில் தனியாகப் பறந்த முதல் இந்தியப் பெண் விமானி அவனி.
கடந்த பிப்ரவரி 19-ம் தேதியன்று நீலவானைக் கிழித்துக்கொண்டு விமானத்தில் சீறியபோது அவனி சதுர்வேதி புது வரலாறு படைத்தார்.
போர் விமானத்தில் தனியாகப் பறந்த முதல் இந்தியப் பெண் விமானி என்பதே அந்த வரலாற்றுப் பதிவு.
24 வயதாகும் ‘பிளையிங் ஆபிசர்’ அவனி, குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 பைசன் போர் விமானத்தில் உயர்ந்து, வானில் மின்னலாய்ப் பாய்ந்தபோது, அவருக்குள் உற்சாகப் பரபரப்பும், நிறைவும் நிரம்பியிருந்தன.
இந்த மத்தியப்பிரதேச பெண்ணுக்கு பல்லாண்டு கால கனவு நிறைவேறிய தருணமல்லவா அது?
திறந்தது விமானப் படை கனவு
போர் விமானங்களைச் செலுத்த பெண்களையும் அனுமதிப்பது என்று இந்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோருடன் அவனி சதுர்வேதி கடந்த 2016-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் போர் விமானிகள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அங்கு அவர்களுக்கு, போர் விமானங்களைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரில் பிறந்த அவனிக்கு, விண்ணில் பவனி வருவது சிறுவயதுக் கனவு.
அதை மனதில் இருத்தியபடியே, தொழில்நுட்பவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்தார், இந்திய விமானப் படை தேர்வில் வென்று, ஐதராபாத் விமானப் படை அகாடமியில் பயிற்சி பெற்றார்.
விண்ணில் வெற்றிப் பயணம்
இன்று பலரும் நிமிர்ந்து பார்க்கும் அவனி, தனது வெற்றிப் பயணம் பற்றிக் கூறுகிறார்...
“சிறுவயதில், நானும் எல்லாக் குழந்தைகளையும் போல வானில் சிறகடிக்கும் பறவைகளை ஆர்வமாய் பார்ப்பேன். நம்மாலும் இப்படி விண்ணில் பறக்க முடியுமா என்று எண்ணுவேன். எனக்குள் எப்போதும் இருந்த அந்தக் கனவுதான் என்னை இந்திய விமானப் படைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. எங்கப்பா ஒரு சிவில் என்ஜினீயர், எங்கம்மா இல்லத்தரசி. எனது பெற்றோர் மட்டுமின்றி, இந்திய விமானப் படை சக அலுவலர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோருமே எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.
விண்ணை அளக்கும் எனது கனவுக்கு, இந்திய விமானப் படை சிறந்த தளம் என்று கூறுவேன். இந்தியாவின் முதல் பெண் போர் விமானி ஆனது எப்படி இருக்கிறது என்று என்னைக் கேட்டால், அது ஒரு மிகச் சிறந்த உணர்வு என்பேன். சுதந்திரம், விடுதலையின் உணர்வு.
விமானியாக இருப்பதே வாழ்க்கை வழியான ஒரு பயணம்தான். வாழ்க்கைப் பயணம் எப்படிப் போகும், எவ்வளவு கடினமாக இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. அதேபோல ஒவ்வொரு விமானப் பயண புறப்பாடும், கீழிறங்குதலும் வித்தியாசமானது. எனவே இது, நாம் தொடர்ச்சியாக கற்றுக்கொள்ளும் விஷயம். நான் சாதித்ததாகக் கூறப்படுவது எல்லாம், எங்கள் அணியின் சாதனை என்றே கூறுவேன்.
ஒரு பெண் விமானியாக...
ஓர் ஆண் விமானிக்குரிய அனைத்து வசதிகளும், கஷ்டங்களும் பெண் விமானிக்கும் இருக்கின்றன. விமானத்துக்கு நாம் ஆண் என்பதோ பெண் என்பதோ தெரியாது. யாராக இருந்தாலும், ஒரு மிக் விமானத்தைச் செலுத்துவதற்கு முன் நீண்ட தூரத்தைக் கடக்க வேண்டும். அது எஸ்கலேட்டரில் உயர்வது போலத்தான். ஒரு போர் விமானி என்பது கூட்டுப்பணி என்றும் நான் சொல்வேன்.
போர் விமானத்தைச் செலுத்தும் நாளன்று, அதில் ஈடுபடும் முதல் இந்தியப் பெண் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு ஒரே நேரத்தில் உற்சாகமும் பட படப்பும் ஏற்பட்டன. எனது முதல் பயணம், 30 நிமிடம் தனியாகப் பறப்பதாக அமைந்தது.
வேறு ஆர்வங்கள்
எனக்கு விமானம் ஓட்டுதல் தவிர வேறு சில ஆர்வங்களும் இருக்கின்றன. நான் கற்பனைக் கதைகள், மற்ற விஷயங்களை நிறையப் படிப்பேன். பணி இல்லாத நேரத்தில், ஓடுவேன். ஒரு போர் விமானியாக நான் எப்போதும் உடல்தகுதியுடன் இருப்பதும், ஆரோக்கியம் காப்பதும் முக்கியம்.
சாதிக்க நினைக்கும் சக பெண்களுக்கு...
என்னைப் போல விண்ணை வெல்ல விரும்பும் பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்... நீங்கள் கனவு காணலாம், ஆனால் அவற்றை நனவாக்க கடுமையாக உழைக்க வேண்டும். நீங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரலாம், அவற்றையெல்லாம் தாண்டிவர வேண்டும். மனிதர்களாகிய நாம் இயற்கையாக பறக்கும்விதத்தில் படைக்கப்பட்டவர்கள் அல்ல, ஆனால் கற்றுக்கொண்டு நம்மால் பறக்க முடியும்!"
அவனியின் வார்த்தைகளில் ஒரு தெம்பூட்டும் தொனி தெரிகிறது.