சேலத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள் திடீர் மோதல்
சேலத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம்,
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் கூட்டுறவு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கூட்டுறவு தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே பழைய நாட்டாண்மை கட்டிட வளாகத்திற்குள் நேற்று மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஏராளமானோர் வந்தனர். அப்போது, மாவட்ட தலைவருக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது, தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்தில் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் இயக்குனர் பதவிக்கு 42 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 7 இயக்குனர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து நோட்டீஸ் பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தகவல் சங்க உறுப்பினர் களுக்கு தெரியவந்தது.
இதனால் சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் எப்படி இயக்குனர்களை தேர்வு செய்யலாம் எனக்கூறி இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அடிக்க பாய்ந்ததால் தள்ளுமுள்ளு உருவானது. இதனால் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்து சங்க நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய நாட்டாண்மை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் கூட்டுறவு தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.