2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை

2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி இன்று (சனிக்கிழமை) கர்நாடகம் வருகிறார்.

Update: 2018-04-06 21:50 GMT
பெங்களூரு,

ராகுல் காந்தி இன்று கோலாரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், நாளை பெங்களூருவில் நடக்கும் பிரசார கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பு அடைந்து வருகிறது.

இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஏற்கனவே ஐதராபாத்-கர்நாடக, மும்பை கர்நாடகம், பழைய மைசூரு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்.

கடைசியாக சிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு, ராமநகர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டிவிட்டு டெல்லி சென்றார். இந்த நிலையில் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) கர்நாடகத்திற்கு வருகிறார். அவர் கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய இடங்களில் இன்று நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

இதைதொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதிலும் ராகுல்காந்தி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதற்கு தேவையான மேடை, பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்ட ஏற்பாட்டு பணிகளை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் அரண்மனை மைதானத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதே போல் நேற்று, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் அந்த மைதானத்திற்கு சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரண்மனை மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

மேலும் செய்திகள்