பெரம்பலூரில் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பூட்டுப்போட முயற்சி
பெரம்பலூரில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பூட்டுப்போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ராஜ்குமார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் குணாளன் தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரண்டு வெங்கடேசபுரத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு பூட்டு போடுவதற்காக கோஷமிட்டபடியே செல்ல முயன்றனர்.
அப்போது, மத்திய அரசை கண்டித்தும், மாநில அரசு உரிய அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திகோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நுழைவு வாயிலிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி 30 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.