காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் கட்டிட பொறியாளர்கள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடியில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சுந்தரக்கோட்டை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை அருகில் மன்னார்குடி கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு சங்க கிளை தலைவர் அழகானந்தம் தலைமை தாங்கினார். பொறியாளர்கள் பாலமுருகன், ஜான்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை காவிரி உரிமை மீட்புகுழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தொடங்கி வைத்தார். இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் பாரதிசெல்வன், திராவிடர் கழக பேச்சாளர் ராம.அன்பழகன், வக்கீல் நல்லதுரை, வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா உள்பட பலர் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொறியாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.