கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2018-04-06 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர் திடீரென, தான் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெயை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவர் உடல் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் அவர் கூறியதாவது: நான் முற்றிலும் கண்பார்வையை இழந்த 100 சதவீத மாற்றுத்திறனாளி. இறந்துவிட்ட எனது அப்பா, சம்பாதித்த நிலத்தில் 2.25 ஏக்கர் நிலத்தை எனது பெயருக்கு உயில் எழுதி பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அந்த நிலத்தை உட்பிரிவு செய்து, அளந்து தனிப்பட்ா எனது பெயரில் உள்ளது.

இந்த நிலையில் என்னுடைய நிலத்தை உறவினர்கள் சிலர் அபகரிக்க பார்க்கிறார்கள். இது குறித்து போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நான் தீக்குளித்து தற்கொலை செய்ய வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமரேசனிடம் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்